கோட்டக்குப்பம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை, ரவுடி உள்பட 7 பேர் சிக்கினர்


கோட்டக்குப்பம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை, ரவுடி உள்பட 7 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 12 July 2019 10:30 PM GMT (Updated: 12 July 2019 9:10 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடி உள்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கோட்டக்குப்பம்,

கோட்டக்குப்பம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் வினோத் என்கிற வினோத்ராஜ் (வயது 28). அ.தி.மு.க. பிரமுகர். அதே பகுதியை சேர்ந்த முகே‌‌ஷ் (30). அபி‌‌ஷ். இவர்கள் இருவரும் வினோத்ராஜின் நண்பர்கள்.

நேற்று முன்தினம் மதியம் அபி‌‌ஷ் காலாப்பட்டில் உள்ள மதுக்கடையில் மதியம் மது குடிக்க சென்றார். அங்கு கீழ்புத்துப்பட்டு சாவடியை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா, தனது நண்பர்களுடன் மது குடித்தார். அப்போது அபிசுக்கும், ஜனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அபிஷை, ஜனா தரப்பினர் தாக்கி விரட்டி அடித்தனர்.

இதுபற்றி அபி‌‌ஷ், வினோத்ராஜிடம் முறையிட்டார். உடனே அவர் நண்பர் முகே‌சுடன் அபிசை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் காலாப்பட்டுக்கு சென்றார். கீழ்புத்துப்பட்டு மதுவிலக்கு சோதனை சாவடி அருகே எதிரே மோட்டார் சைக்கிள்களில் ஜனா மற்றும் அவரது கூட்டாளிகள் வந்தனர். அவர்களை வினோத்ராஜ் வழிமறித்து, அபிசை தாக்கியது குறித்து தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜனா மற்றும் அவரது கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வினோத்ராஜை சரமாரியாக வெட்டினார்கள். இதனை பார்த்த அபி‌‌ஷ் பயந்து ஓடிவிட்டார். தடுக்க முயன்ற முகேசை அந்த கும்பல் கற்களால் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து ஜனா தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அரிவாளால் வெட்டப்பட்ட வினோத்ராஜ் மற்றும் கற்களால் தாக்கப்பட்ட முகே‌‌ஷ் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவி மற்றும் போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்ராஜ் பரிதாபமாக இறந்துபோனார். முகே‌‌ஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கொலை செய்யப்பட்ட வினோத்ராஜிக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், வினோத்ராஜ் நண்பர் அபி‌சுக்கும், ரவுடி ஜனாவின் கூட்டாளி சரணுக்கும் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைப்பது தொடர்பாக கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், அபி‌சுக்கு ஆதரவாக செயல்பட்ட வினோத்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். ஜனா (29) மற்றும் அவரது கூட்டாளிகள் மாத்தூர் முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று முந்திரி தோப்பில் பதுங்கியிருந்த ஜனா மற்றும் அவரது கூட்டாளிகள் கவுதம் (29), பரத் (24), சரண் (24), கதிரவன் (27), மோராஜ் (22), கபிலன் (45) ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அனிச்சங்குப்பத்தை சேர்ந்த கலைஞர் என்பவரின் துண்டுதலின்பேரில் வினோத்ராஜ் கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை கிரு‌‌ஷ்ணமூர்த்தி போலீசில் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வினோத்ராஜின் ஆதரவாளர்கள் சுனாமி குடியிருப்பில் உள்ள கலைஞர் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும் அங்குள்ள 2 வீடுகளுக்கு தீ வைத்தனர்.

அனிச்சங்குப்பம், கீழ்புத்துப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story