பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில், தண்ணீர் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தண்ணீர் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிருக்கு போராடி வருகிறார்.
கொடைக்கானல்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கொடைக் கானலுக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பீட்டர் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். பழனி- கொடைக்கானல் மலைப்பாதையில் வெள்ளைப்பாறை என்ற இடத்தில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடியது.
இதையடுத்து லாரியை கட்டுக்குள் கொண்டுவர டிரைவர் போராடினார். ஆனால் அதற்குள் மலைப்பாதையோரத்தில் உள்ள 50 அடி பள்ளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் லாரியில் இருந்த தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்ட பெட்டிகளும் சிதறி கீழே விழுந்தன.
லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பீட்டர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிடப்பதை பார்த்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பீட்டரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன். குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளைப்பாறை பகுதியில் உள்ள மலைப்பாதை குறுகலாக இருப்பதாலேயே விபத்து ஏற்படுகிறது. எனவே மலைப்பாதையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story