ஒத்தி பணத்தை கொடுக்காமல் வீட்டை காலி செய்யக்கூறி மிரட்டியதால் அதிர்ச்சியில் முதியவர் சாவு - மயிலாடுதுறையில் பரிதாபம்
மயிலாடுதுறையில் ஒத்தி பணத்தை கொடுக்காமல் வீட்டை காலி செய்யக் கூறி மிரட்டியதால் அதிர்ச்சியில் முதியவர் இறந்தார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நீடூர் பகுதியை சேர்ந்தவர் ஜர்ஜீஸ். இவருக்கு சொந்தமான குடியிருப்பு வளாகம், மயிலாடுதுறை துபாஷ் தெருவில் உள்ளது. ஜர்ஜீஸ் வெளிநாட்டில் இருப்பதால் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளை பராமரிக்கவும், வீடுகளை ஒத்திக்கு மற்றும் வாடகைக்கு விடுவதற்கும் தாஜ்தீன் என்பவரை அதிகாரம் பெற்ற முகவராக (பவர் ஏஜெண்டு) நியமித்துள்ளார்.
அதன்பேரில் தாஜ்தீன், குடியிருப்பவர்களிடம் ஒரு வீட்டிற்கு ஒத்தியாக ரூ.3 லட்சம் வரை ஒப்பந்தம் செய்து பெற்று கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தாஜ்தீன், கடந்த மாதம் 17-ந் தேதி இறந்துவிட்டார். அதனை தொடர்ந்து குடியிருப்பவர்கள், தாஜ்தீனின் வாரிசுகளிடமும், இடத்தின் உரிமையாளரிடமும் ஒத்தி தொடர்பாக புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் பின்னர் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு குடியிருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குடியிருப்பவர்கள், கடந்த 4-ந் தேதி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பு வளாகத்திற்குள் ஒரு கும்பல் புகுந்து வீடுகளை காலி செய்யக்கூறி மிரட்டினர். இதில் அங்கு ஒரு வீட்டில் வசித்த வரதராஜன் (75) என்பவர் அதிர்ச்சியில் இறந்துவிட்டார். வீட்டிற்கு ஒத்தியாக பெற்ற பணத்தை வாங்கியவர்கள் திரும்ப கொடுக்காததால் அதிர்ச்சியில் இறந்த வரதராஜனுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தியும், மிரட்டி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story