தென்காசி அருகே பரபரப்பு: தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ; 4 பேர் கருகினர் ரூ.1½ கோடி பொருட்கள் எரிந்து சேதம்


தென்காசி அருகே பரபரப்பு: தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ; 4 பேர் கருகினர் ரூ.1½ கோடி பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 12 July 2019 10:30 PM GMT (Updated: 12 July 2019 7:02 PM GMT)

தென்காசி அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் உடல் கருகினர். ரூ.1½ கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தென்காசி, 

தென்காசி அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் உடல் கருகினர். ரூ.1½ கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தனியார் தொழிற்சாலை

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டரை சேர்ந்தவர் சிவ்கான் படேல். இவருக்கு தென்காசி அருகே உள்ள வல்லத்தில் மஞ்சள்பொடியில் இருந்து ரசாயனம் தயாரித்து, அதை மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் நேற்று காலையில் வழக்கம்போல் ரசாயனம் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அதிகாலை 5 மணி அளவில் அங்கு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. எதிர்பாராமல் பற்றிய இந்த பயங்கர தீயினால் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். தீ விபத்து காரணமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கரும்புகை அந்த பகுதியை சூழ்ந்தது.

4 பேர் கருகினர்

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களான வல்லத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 45), செங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (32), காசிமேஜர்புரத்தை சேர்ந்த செண்பகம் (84), பிரானூர் பார்டரை சேர்ந்த கண்ணன் (21) ஆகிய 4 பேர் உடல் கருகினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த தென்காசி, செங்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் செங்கோட்டை, குற்றாலம் போலீசார் அந்த தொழிற்சாலைக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த பணியில் நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி அலுவலர் விஜய் ஆனந்த், தென்காசி நிலைய அலுவலர் விஜயன், செங்கோட்டை நிலைய அலுவலர் மூக்கையா மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டார்கள்.

ரூ.1½ கோடி பொருட்கள் சேதம்

தீயில் கருகி காயமடைந்த 4 பேரையும் போலீசார் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த கண்ணன் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1½ கோடி மதிப்புள்ள பொருட்கள், மஞ்சள் மூடைகள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் கருகிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story