குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா 20 பேர் கைது


குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா 20 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 3:45 AM IST (Updated: 13 July 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் பக்கமுள்ள கலியனூர் அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட கலியனூர் பெரிய ஏரி சுமார் 40 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரி நீரானது சுற்றியுள்ள 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

இந்த ஏரியில் கடந்த சில நாட்களாக ராட்சத எந்திரங்களை கொண்டு மண்ணை லாரி லாரியாக அள்ளி சென்று விற்பனை செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் தங்கம், இந்த ஏரியில் குடிமராமத்து பணிகளுக்காக மண்ணை விவசாயிகளால் அள்ளி வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கம்யூனிஸ்டு கட்சியினர், சுற்றியுள்ள கிராம மக்கள் யாருக்கும் இந்த ஏரியில் மண் அள்ள உரிமம் வழங்கப்படவில்லை. வெளியூரைச் சேர்ந்த வியாபாரிகள் இந்த மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்கள். எனவே ஏரியில் மண் அள்ளி கொண்டிருக்கும் எந்திரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தாசில்தார் தங்கம், குமாரபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தந்தார். இதன்பேரில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து , திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Next Story