நாமக்கல் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பழக்கடையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


நாமக்கல் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பழக்கடையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 July 2019 10:00 PM GMT (Updated: 12 July 2019 7:38 PM GMT)

நாமக்கல் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டு இருந்த பழக்கடைகளை நகராட்சி அலுவலர்கள் நேற்று அகற்றினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழக்கடையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக பல்வேறு இடங்களில் பழக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் இருந்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அதை அகற்ற நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை நாமக்கல் நகராட்சி வருவாய் ஆய்வாளர் முருகேசன் தலைமையில், நகர திட்ட ஆய்வாளர் கோவிந்தராஜ், துப்புரவு ஆய்வாளர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ் நிலையத்தில் இருந்த தள்ளுவண்டி மற்றும் பழக்கடைக்காரர்களிடம் கடைகளை அகற்றப் போவதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பெரும்பாலான கடைக்காரர்கள் அவர்களாகவே முன்வந்து அவர்களின் பொருட்களை அகற்றி கொண்டனர்.

அதேபோல் நகராட்சி அலுவலர்களும் போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது சில பழக்கடைக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story