மாவட்ட செய்திகள்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை - கலெக்டர் சிவஞானம் தகவல் + "||" + Measures to raise ground water level

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை - கலெக்டர் சிவஞானம் தகவல்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை - கலெக்டர் சிவஞானம் தகவல்
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், நீர் மேலாண்மை இயக்கம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்திற்கு மத்திய அரசின் கண்காணிப்புக் குழுவினரான மத்திய அமைச்சகம் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளர் சோபனா பிரமோத், சுற்றுலாத்துறை துணை செயலாளர் ஹரிதாசன் பிள்ளை, மத்திய நீர் ஆணைய இயக்குனர் காயும் முகமது மற்றும் மத்திய நீர் ஆணைய துணை இயக்குனர் தரம்வீர்சிங் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.


பின்னர், கலெக்டர் கூறியதாவது:-

நீர் மேலாண்மை இயக்கம் மூலம் மத்திய நீர்வள ஆதார அமைப்பு இந்திய அளவில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து கள ஆய்வு நடத்தியதில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 541 வருவாய் குறுவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ளது என்றும், இதில் விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம், ஆமத்தூர், மங்கலம், ஒண்டிப்புலிநாயக்கனூர், சல்வார்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழபுரம், கீழராஜகுலராமன், மல்லாங்கிணறு, நத்தம்பட்டி, பிள்ளையார் குளம், ராஜபாளையம், வச்சக்காரபட்டி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய 14 வருவாய் குறுவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் நீர்மேலாண்மை மற்றும் மழை நீர் சேமிக்கும் பொருட்டு நீர் நிலைகளை கண்காணித்து அவற்றை பொதுமக்கள், விவசாயிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து ஏரிகள், கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, நீர்வள ஆதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, புராதன நீர் நிலைகள் மேம்பாடு, நீர்வடி நில பகுதி மேம்பாடு மற்றும் தீவிர மரங்கள் வளர்ப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய மத்திய அரசின் குழு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது. இக்குழு விருதுநகர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்குடனும், விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல், தனிநபர் மற்றும் சமுதாய கழிவுநீர் உறிஞ்சுகுழி அமைத்தல், வரத்துக்கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டுதல், சிறு,குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு அமைத்துக்கொடுத்தல் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு மேம்பாட்டு திட்டப்பணிகளை நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளது. இப்பணிகளில்் விருப்பமுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகள் என்று கண்டறிப்பட்ட கிராமங்களில் பொது மக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு தண்ணீரை சேமிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் தண்ணீரின் அவசியம் குறித்தும், அதன் தேவை அறிந்து பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

அதேபோல கிராமப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முகாம்களை நடத்த வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து எடுத்துரைப்பதோடு மட்டும் மல்லாமல் பல்வேறு போட்டிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர்்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.