விலையில்லா மடிக்கணினி கேட்டு எளம்பலூர் பள்ளியை முற்றுகையிட்ட முன்னாள் மாணவர்கள்
விலையில்லா மடிக் கணினி கேட்டு எளம்பலூர் பள்ளியை முன்னாள் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடாலூரில் மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகளுக்கு இன்னும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்த 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகள், அவர்கள் படித்த பள்ளிகள் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் உடனடியாக மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று காலையில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் மாரி.மீனாள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மடிக்கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் விலையில்லா மடிக்கணினி உடனடியாக வழங்கக்கோரி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் உடனடியாக மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் அரை மணி பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து பாதிப்பினை ஒழுங்குப்படுத்தினர். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்கு மடிக்கணினிகள் உடனடியாக வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு சென்றனர்.
Related Tags :
Next Story