மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம்; கிரண்பெடியின் அப்பீல் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம்; கிரண்பெடியின் அப்பீல் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2019 12:00 AM GMT (Updated: 12 July 2019 8:35 PM GMT)

புதுவை அரசில் யாருக்கு அதிகாரம்? என்பது தொடர்பான வழக்கில் கவர்னர் கிரண்பெடியின் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரக்கே அதிகாரம் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

புதுவையில் அமைச்சரவைக்கும் கவர்னர் கிரண் பெடிக்கும் அதிகார மோதல் இருந்து வருகிறது.

புதுச்சேரியில், மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை கவர்னர் கிரண்பெடி கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும், அவரது ஒட்டுமொத்த செயல்பாடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி, ராஜ் பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பெடிக்கு சிறப்பு அதிகாரம் இல்லை எனவும், அவர் மந்திரிசபை முடிவு அடிப்படையில்தான் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

மேலும், முதல்-அமைச் சரின் அதிகாரத்தில் துணைநிலை கவர்னர் தலையிட முடியாது என உத்தரவிட்ட ஐகோர்ட்டு, இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து கடந்த ஏப்ரல் 30-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் சார்பிலும், கிரண்பெடி சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை மே 10-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்ததுடன், எதிர் மனுதாரரான கே.லட்சுமிநாராயணன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், கவர்னர் கிரண்பெடி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த புதிய மனு ஒன்றில், “புதுச்சேரி அரசு, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் சமீபத்தில் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் அதிகாரிகள் இடையே ஒருவகையான மிரட்சி நிலவுவதால் அரசு பணிகள் தடைபட்டுள்ளன.

எனவே, கவர்னர் அதிகாரம் தொடர்பான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு முன்பிருந்த நிலையே தொடரும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த இரு மனுக்களையும் கடந்த ஜூன் 4-ந் தேதி விசாரித்த நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, புதுச்சேரி மந்திரிசபை கூட்டத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கலாம் என்றும், அதே நேரத்தில் நிலம் மாற்றுவது தொடர்பான நிதிசார்ந்த கொள்கை முடிவுகள் எவற்றையும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை செயல்படுத்தக்கூடாது என்றும், அது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி புதுச்சேரி கவர்னர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சை அணுகுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

இந்த உத்தரவால் கடந்த ஜூன் 4-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, முடிவுகளை செயல்படுத்த புதுச்சேரி அரசுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story