நகைக்கடை அதிபரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெங்களூரு கலெக்டர் விஜய்சங்கர் சிறையில் அடைப்பு


நகைக்கடை அதிபரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெங்களூரு கலெக்டர் விஜய்சங்கர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 12 July 2019 10:30 PM GMT (Updated: 12 July 2019 8:48 PM GMT)

நகைக்கடை அதிபரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெங்களூரு கலெக்டர் விஜய்சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெங்களூரு, 

நகைக்கடை அதிபரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெங்களூரு கலெக்டர் விஜய்சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரூ.1,640 கோடி மோசடி

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,640 கோடியை மோசடி செய்துவிட்டு, துபாய்க்கு தப்பியோடிவிட்டார். இந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மன்சூர்கானின் நகைக்கடையில் நடந்த முறைகேடுகளை மூடி மறைப்பதற்காக அவரிடம் ரூ.1.50 கோடி லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு கலெக்டர் விஜய்சங்கர் மற்றும் ரூ.4.50 கோடி லஞ்சம் வாங்கிய பெங்களூரு வடக்கு மண்டல உதவி கமிஷனர் நாகராஜ் ஆகியோரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் சிறப்பு விசாரணை குழு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து சிறப்பு விசாரணை குழு போலீசார் நேற்று பெங்களூரு கலெக்டர் விஜய்சங்கர் மற்றும் நாகராஜை பெங்களூரு முதலாவது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். மேலும் சிறப்பு விசாரணை குழுவினர் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் அனுமதி கேட்கவில்லை. இதனால், விஜய்சங்கர் மற்றும் நாகராஜை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து பெங்களூரு கலெக்டர் விஜய்சங்கர், உதவி கமிஷனர் நாகராஜ் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, விஜய்சங்கர் வீட்டில் இருந்து ரூ.1.50 கோடி பணம் மற்றும் பொருட்களை சிறப்பு விசாரணை குழு போலீசார் பறிமுதல் செய்துகொண்டனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் நகைக்கடை மோசடியில் மன்சூர்கானுக்கு ஆதரவாக செயல்பட்ட ரவுடி முனீர் என்கிற ‘கன்’ முனீர், அவருடைய கூட்டாளி பாபு ஆகிய 2 பேரையும் நேற்று இரவு சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story