துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்ய வேண்டும் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் பேச்சு
துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்திடல் வேண்டும் என்று தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் கூறினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகதார பணியாளர்களின் பணிகள் மற்றும் அவரைச்சார்ந்து வாழும் குடும்பத்தினரின் சமூக பொருளாதார நிலை, வாழ்வியல் சூழ்நிலை, கல்வி நிலை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி பேசியதாவது:-
உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சார்ந்த உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு காப்பீட்டுத்திட்டத்தில் இணைந்திருப்பதையும், உறுதி செய்திடல் வேண்டும். தூய்மை தொழிலாளர் மலக்குழி சாக்கடை நச்சுவாயு மரணங்களை தடுக்கவும் கடுமையான தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரத்தினை மேற்கொள்ள வேண்டும்.
மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தினை நடைமுறைப்படுத்துதலை முறையாக நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சியின் செயல் அலுவலர்கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். சுகாதாரப்பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தாட்கோ மூலம் கடனுதவிகள் வழங்கி, வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கதிர்சங்கர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் திருநாவுகரசு மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story