கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கிட வேண்டும். நோயாளிகளின் சேவைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை அமல்படுத்த வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்திட வேண்டும். தமிழக சுகாதாரத்தின் அடித்தளம் காத்திட அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கலா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர்கள் ரமேஷ், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், ஜனநாயக தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம், அனைத்து மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர். வருகிற 18-ந்தேதி தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையின் விவாதத்தின்போது டாக்டர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் அன்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். முன்னதாக டாக்டர் அன்பரசு வரவேற்றார். முடிவில் டாக்டர் சுதாகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story