அன்னூரில் பரபரப்பு, தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் அடித்ததால் ரூ.4 கோடி நகை தப்பியது


அன்னூரில் பரபரப்பு, தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் அடித்ததால் ரூ.4 கோடி நகை தப்பியது
x
தினத்தந்தி 13 July 2019 4:15 AM IST (Updated: 13 July 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

அன்னூரில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. அலாரம் அடித்ததால் ரூ.4 கோடி நகை மற்றும் ரூ.10 லட்சம் பணம் தப்பியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர்-அவினாசி சாலையில் தனியார் வங்கி உள்ளது. இதன் மேலாளராக சென்னையை சேர்ந்த சுதிந்தர் (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வங்கியில் அலாரம் ஒலித்தது. இதை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த அன்னூர் ரோந்து போலீசார், வங்கி மேலாளரை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் வங்கிக்கு விரைந்து வந்து வங்கியை திறந்தார். இதில், வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் வங்கிக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது, மர்ம நபர்கள் வங்கியின் பின்பக்கமாக உள்ள ஜன்னல் கம்பியை அறுத்து, உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா இணைப்புகளை துண்டித்து உள்ளனர். இதையடுத்து கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒயரை மின் இணைப்பில் சொருகி கட்டிங் எந்திரம் மூலம் லாக்கரை அறுக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை.

பணம், நகை தப்பியது

இந்த நிலையில் வங்கியில் இருந்த அலாரம் திடீரென்று ஒலிக்கத்தொடங்கியது. இதனால் கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் வந்து விடுவார்கள் என்று பயந்த கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த 30 அடி நீள சிவப்பு ஒயர் மற்ற கருவிகள் இருந்த பெட்டி ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டது தெரிய வந்தது.

வங்கியின் லாக்கரை உடைக்க முடியாததால், அதில் இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணம் தப்பியது. இதற்கிடையில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். வங்கியில் இருந்த ஒரு சில கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் கொள்ளையர்களின் உருவம் வங்கியில் வேறு ஏதேனும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் வங்கி உள்ள அவினாசி சாலை, தனியார் வணிக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, நேற்று அதிகாலை 3.15 மணியளவில் வங்கியின் அருகே உள்ள பழக்கடையில் விளக்கு எரிந்து, பின்னர் அணையும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் கொள்ளையர்களின் உருவம் தெரியவில்லை. இதனால் 3.15 மணிக்கு பிறகு கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றதை அறிந்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கருமத்தம்பட்டி அருகே முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள தனியார் வங்கியில் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. தற்போது அன்னூரில் உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதனால் 2 சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story