ஊட்டி நகரில், அனுமதியின்றி கட்டப்பட்ட விடுதிகளுக்கு சீல் வைக்க முடிவு - அதிகாரி தகவல்
ஊட்டியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகளில் கட்டிடங்கள் கட்டப்படுவதை வரைமுறைப்படுத்த மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. பேரூராட்சி, ஊராட்சிகளில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது, வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டி 50 மீட்டர் தூரத்துக்குள் வீடு கட்ட அனுமதி கிடையாது, வணிகவளாகங்கள், ஓட்டல்கள் கட்ட மாவட்ட கலெக்டரின் தலைமையில் இயங்கும் அழகுணர்வு குழுவுக்கு விண்ணப்பிக்க வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் வணிக கட்டிடங்கள் கட்டக்கூடாது உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இதற்கிடையே ஊட்டியில் வீடுகள் கட்டுவதற்கு நகராட்சியிடம் அனுமதி வாங்கி விட்டு, வீடுகள் கட்டுவதற்கு பதிலாக தங்கும் விடுதிகளை சிலர் கட்டுகின்றனர். மேலும் சில கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற கட்டிடங்கள் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி சீல் வைக்கும் நடவடிக்கையை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. சென்னை ஐகோர்ட்டு அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள மின் இணைப்பு துண்டிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து கூடலூரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.ஆர்.பஜார் பகுதியில் 11 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ஊட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் விதிமுறைகளை மீறியும், அனுமதி இன்றியும் கட்டப்பட்டு உள்ளதும், தொட்டபெட்டா ஊராட்சியில் வீடுகளுக்கு என அனுமதி பெறப்பட்டு, வணிக மையமாக மாற்றப்பட்டு உள்ளதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஊட்டியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட ஆயிரம் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து ஊட்டி நகர பொதுமக்கள் கூறும்போது, விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கின்றனர். சில நாட்களுக்கு பின்னர் அந்த கட்டிடங்கள் வழக்கம்போல் தங்கும் விடுதிகளாக செயல்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. ஊட்டியில் பல இடங்களில் அனுமதி பெறாமல் தொடர்ந்து கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story