திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் சிலைகள் திருட்டு, தலைமறைவாக இருந்த குற்றவாளி நேபாள எல்லையில் கைது - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகள் திருட்டு வழக்கில் தலை மறைவாக இருந்த குற்றவாளி ராம் குமாரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேபாள எல்லையில் வைத்து கைது செய்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
பழனி,
பழனி பாலாறு-பொருந்தலாறு இல்லத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ராணி மங்கம்மாள் அரசு அருங்காட்சியகம் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிருந்த 31 சிலைகள் திருடு போனது. இதுகுறித்து மலைக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, காரைக்குடியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 47), ஆனந்தன் (44), சிவா (47) மற்றும் திருப்பத்தூரை சேர்ந்த சிவசிதம்பரம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 21 சிலைகள் மீட்கப்பட்டன. இதில் தொடர்புடைய மேலும் 5 பேர் வெளிமாநிலங்களில் தலைமறைவாகினர். இதைத்தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய காரைக்குடி பட்டணம்பட்டியை சேர்ந்த ராம்குமார் (35) என்பவர் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள இந்திய-நேபாள எல்லையான சோனாலி என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று, நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, கடத்தப்பட்ட மீதமுள்ள சிலைகள் குறித்த விவரம் தெரியவரும். அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story