மாவட்ட செய்திகள்

குத்தகை நிலத்தை மனையாக மாற்ற முயற்சி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியல் + "||" + Leased land Flats is trying to change Thanjavur, Farmers Picketing the road

குத்தகை நிலத்தை மனையாக மாற்ற முயற்சி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியல்

குத்தகை நிலத்தை மனையாக மாற்ற முயற்சி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியல்
குத்தகை நிலத்தை மனையாக மாற்ற முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 47 விவசாய குடும்பத்தினர் 43 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் குத்தகை பணத்தை கட்டி ரசீது பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிலத்தின் உரிமையாளர், நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டதாக கூறி கரம்பயத்தை சேர்ந்த சிலர், டிராக்டர்கள், பொக்லின் எந்திரங்களை கொண்டு விளை நிலத்தை வீட்டுமனையாக மாற்ற சமப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர்.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பணிகள் கைவிடப்பட்டது. இந்த நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று 3 பொக்லின் எந்திரங்கள், டிராக்டர்களுடன் ஏராளமானோர் குத்தகை நிலத்தில் புகுந்து வீட்டுமனையாக மாற்றுவதற்கான சமப்படுத்தும் பணியை தொடங்கினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் விவசாயிகள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு விளை நிலத்தில் உள்ள பொக்லின் எந்திரம், டிராக்டர்கள், ஆட்களை வெளியேற்றினால் தான் மறியலை கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். இதனையடுத்து பொக்லின் எந்திரங்கள், டிராக்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டவுடன் ஆட்களும் வெளியேறினர்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தாசில்தார் அருணகிரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று விவசாயிகள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.