மணப்பாறை அருகே குடிநீர் தொட்டிக்குள் அடை காத்த கருநாகம் தீயணைப்பு வீரர்கள் பிடித்து சென்றனர்
மணப்பாறை அருகே குடிநீர் தொட்டிக்குள் கருநாகம் ஒன்று அடைகாத்தபடி படுத்து கிடந்தது. அந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
மணப்பாறை,
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதுவும் கொடிய விஷத்தன்மை கொண்ட கருநாகம் என்றால் சொல்ல வேண்டுமா?. கிராம மக்களை கதிகலங்க செய்த அப்படி ஒரு சம்பவம் மணப்பாறை அருகே நேற்று அரங்கேறியது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியில் நீரேற்று உந்து நிலையம் உள்ளது. இதன் பின்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. அதன்அருகே சிறிய தொட்டி ஒன்றும் உள்ளது. அந்த தொட்டியில் தற்போது தண்ணீர் இல்லை. அதில் கருநாகம் ஒன்று சுருண்டு படுத்து கிடந்தது.
குடிநீர் தொட்டிக்குள் பாம்பு படுத்து இருப்பதை அறிந்த அந்த பகுதி மக்கள் அதை பிடிக்க முயற்சித்தபோது அது கடும் ஆக்ரோஷம் அடைந்தது. அந்த கருநாகம் தான் இட்ட முட்டைகளை அடைகாத்து கொண்டு இருந்தது தான் ஆக்ரோஷத்திற்கு காரணம். இதனால், அதன் அருகே செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்பட்டனர்.
இதுகுறித்து மணப்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த பாம்பு அடைகாத்து வந்த 10-க்கும் மேற்பட்ட முட்டைகளையும் எடுத்து சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அந்த பாம்பை வனத்துறையினர் பெற்று காட்டில் கொண்டுபோய் விட்டனர். அதன் முட்டைகளை காட்டில் உள்ள புதரில் பத்திரமாக வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிறு நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story