சேலத்தில் சிறை வார்டன் கொலை: பிரபல ரவுடி உள்பட 9 பேர் சிக்கினர் பரபரப்பு தகவல்கள்
சேலத்தில் சிறை வார்டன் கொலையில் பிரபல ரவுடி உள்பட 9 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூரமங்கலம்,
சேலம் அய்யம்பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 28). சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு சூரமங்கலம் பகுதியில் 2 கார்களுக்கு தீ வைத்து எரித்த வழக்கில் இவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், ஆண்டிப்பட்டி பகுதியில் மீன் பண்ணை அமைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மாதேஸ் தனது மீன்பண்ணைக்கு சென்றபோது, அங்கு காரில் வந்த சிலர் மாதேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கொலையுண்ட மாதேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சூரமங்கலத்தை சேர்ந்த டேவிட் என்பவருக்கும், சிறை வார்டன் மாதேசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. பிரபல ரவுடியான டேவிட் தலைமையில் 9 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், கொலையுண்ட மாதேசின் மனைவி வினோதினி சூரமங்கலம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், தனது கணவரை டேவிட் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்துள்ளனர், என தெரிவித்துள்ளார். அதன்படி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். மேட்டூர், ஒகேனக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய, விடிய நடந்த தேடுதல் வேட்டையில் சூரமங்கலத்தை சேர்ந்த பிரபல ரவுடி டேவிட் உள்பட 9 பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் டேவிட் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தான் மாதேசை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
சிறை வார்டன் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம் மத்திய சிறையில் வார்டனாக மாதேஸ் இருந்தபோது, கைதிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேலும், சில ரவுடிகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. குற்றச்செயல்களில் ஈடுபடுவதுடன் ரவுடிகளுடன் கைகோர்த்து விபசார கும்பலிடம் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சேலத்தில் அழகு நிலையங்களுக்கு சென்று அங்கு வேலை பார்க்கும் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்தார். இதனால் ஜங்ஷன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், மாதேசுக்கும் தகராறு ஏற்பட்டது. அந்த பெண் இதுபற்றி ரவுடி டேவிட்டிடம் கூறினார்.
இதையடுத்து மாதேசை ரவுடி டேவிட் எச்சரிக்கை செய்து வந்ததாகவும், இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டு மோதல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் விலை உயர்ந்த காரில் சென்றதை பார்த்த மாதேஸ், கடந்த ஆண்டு அந்த காருக்கு தீ வைத்தார். இந்த வழக்கில் சூரமங்கலம் போலீசாரால் மாதேஸ் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிடிபட்ட டேவிட்டிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நண்பர்களுடன் சேர்ந்து மாதேசை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விசாரணைக்கு பின் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story