கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 July 2019 4:30 AM IST (Updated: 13 July 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வசந்தகுமார் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

கர்நாடகத்தில் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்– ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியினர், பா.ஜனதாவை கண்டித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் நேற்று குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜனதா கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ., நகர காங்கிரஸ் தலைவர் அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு, மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜனதா கட்சிதான் காரணம். பா.ஜனதா கட்சியினர் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் எல்லாம் ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள். இது ஜனநாயக படுகொலையாகும். இத்தகைய ஜனநாயக விரோத செயலில் ஈடுபடும் பா.ஜனதாவை கண்டித்துதான் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க பார்க்கிறார்கள். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவர்களை எதிர்க்கும் மாநிலங்களில் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதிப்பதில்லை. இதேநிலை நீடித்தால் கடவுள் அவர்களை தண்டிப்பார்.

இவ்வாறு வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

இதில் நிர்வாகிகள் மகேஷ்லாசர், யூசுப்கான், ஜாண் சவுந்தர், வைகுண்டதாஸ், காலபெருமாள், ரமணி, அருள்சபீதா, தங்கம் நடேசன்,  முருகேசன், தியாகி தவசிமுத்து, முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story