மகள் திருமண ஏற்பாட்டுக்கு பரோல் கேட்டு விண்ணப்பிக்க முருகன் மறுப்பு வக்கீல் புகழேந்தி தகவல்
மகள் திருமண ஏற்பாட்டுக்கு பரோல் வேண்டாம் எனவும், அதற்கு விண்ணப்பிக்கவும் முருகன் மறுத்துவிட்டதாக அவரது வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளாக விடுதலைக்காக போராடி வருகின்றனர். எனினும் விடுதலை கிடைத்தபாடில்லை. இதற்கிடையே மகளின் திருமணத்துக்காக நளினி பரோல் கேட்டு சட்டப்போராட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஐகோர்ட்டு 1 மாதம் பரோல் வழங்கியது.
இந்த நிலையில் அவர்களின் வக்கீல் புகழேந்தி நேற்று வேலூர் ஜெயிலுக்கு வருகை தந்தார். அவர் முருகனை சந்தித்து பேசினார். பின்னர் பெண்கள் ஜெயிலுக்கு சென்று நளினியை சந்தித்து பேசினார். வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நளினி தனது மகள் ஹரித்ரா திருமண ஏற்பாட்டுக்காக 6 மாதம் பரோல் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டது. அவரது பரோல் தொடர்பாக அவரது தாயார் பத்மாம்பாள், காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள குடும்ப நண்பர் சத்தியவாணி ஆகியோர் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர். அதற்கான ஆவணங்களையும், பரோலில் வெளியே வரும்போது அவர் தங்க உள்ள முகவரிக்கான ஆவணங்களும் சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காட்பாடி பிரம்மபுரம், சென்னை கோட்டூர்புரம் ஆகிய 2 இடங்களை அவர் தங்க தேர்வு செய்துள்ளோம். எங்கு தங்க வேண்டும் என்பது குறித்தும், பரோல் தேதியையும் சிறைத்துறை டி.ஐ.ஜி. விரைவில் தெரிவிப்பார். முகவரி குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
நளினி குடும்பமும், முருகன் குடும்பமும் திருமணம் குறித்து கலந்தாலோசிக்க உள்ளனர். அவர்களுடன் நளினியும் ஆலோசித்து திருமண தேதியை முடிவு செய்ய உள்ளனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் லண்டனில் இருந்து ஹரித்ரா சென்னை வர வாய்ப்பு உள்ளது. மகள் திருமண ஏற்பாட்டுக்கு முருகன் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. தற்போதைக்கு பரோல் வேண்டாம் என முருகன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story