ரெயில்வே பாலத்தில் குளம் போல் தேங்கி இருக்கும் மழைநீர் பொதுமக்கள் அவதி


ரெயில்வே பாலத்தில் குளம் போல் தேங்கி இருக்கும் மழைநீர் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 14 July 2019 3:30 AM IST (Updated: 13 July 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே உள்ள ரெயில்வே தரை பாலத்தில் குளம் போல் தேங்கி இருக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

=குடியாத்தம், 

குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூர் ரெயில் நிலையம் அருகே 4 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரெயில்வே தரை பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் வழியாக தான் மேல்ஆலத்தூர், கூடநகரம், பட்டு, கொத்தகுப்பம், அணங்காநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் குடியாத்தம் நகரத்திற்கு வந்து செல்ல வேண்டும்.

மழைக்காலங்களில் இந்த தரை பாலத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கிவிடும். தேங்கிய மழைநீரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் டீசல் என்ஜின் மூலம் பம்ப் செய்து, அதனை அருகில் உள்ள கிணற்றில் விடுவார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக தரை பாலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.

இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த ரெயில்வே தரை பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரால் வாகனங்களின் புகைபோக்கிகளில் தண்ணீர் புகுந்து பழுது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story