ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 அடுக்குமாடியில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தினமும் 15 ஆயிரம் பேர் சிகிச்சை பெறலாம்


ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 அடுக்குமாடியில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தினமும் 15 ஆயிரம் பேர் சிகிச்சை பெறலாம்
x
தினத்தந்தி 13 July 2019 11:15 PM GMT (Updated: 13 July 2019 5:29 PM GMT)

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கென 8 அடுக்குமாடியில் சிகிச்சை பிரிவு கட்டப்பட்டு வருகிறது.

சென்னை,

இந்த கட்டிடம் கட்டும் பணி வரும் ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் தினமும் 15 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெறலாம்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளின் சிகிச்சை தரத்தை மேம்படுத்தி, விரிவுபடுத்துவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டுவதற்கு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தவகையில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கட்டிடம் கட்டும் ஒப்பந்தம் பொது பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக அரசு ரூ.58 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புறநோயாளி சிகிச்சைப் பிரிவு அடுக்குமாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி கட்டிடம் கட்டும் பணியை ஆரம்பித்தது.

அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து அந்த இடத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

முதலில் கீழ்த்தளம், தரைத்தளத்துடன் 4 தளங்கள் கட்டுவதற்கான அனுமதி மட்டும் வழங்கப்பட்டு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 4 தளங்கள் கட்டி முடிக்கப்பட்டது. பிறகு கூடுதலாக மேலும் 4 தளங்கள் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அனுமதியை 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு வழங்கியது. இதையடுத்து கூடுதலாக 4 தளங்கள் கட்ட, மேலும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட பணி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு நவீன வசதிகளுடன் கூடிய 8 அடுக்குமாடி கட்டிடங்களாக கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ்தளம் 2 லட்சத்து 62 ஆயிரம் சதுர அடி கொண்டது.

இதேபோல் மேல் தளம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்படுகிறது. இதில் 8 ‘லிப்டு’ வசதிகளுடன் சாய்தளங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 4 ‘லிப்டு’களில் படுக்கை வசதி ‘லிப்டு’களாக 26 பேர் செல்லும் அளவுக்கும், மற்ற 4 ‘லிப்டு’கள் 15 பேர் வரை செல்லும் அளவுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் 70 கார்கள் மற்றும் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தின் 8-வது தளத்தில் 500 பேர் அமரக்கூடிய கூட்டரங்கம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நவீன கட்டிடத்தில் 25 மருத்துவ துறைகள் செயல்பட உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தின் மூலம் தினமும் 15 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் உருவாகி வருகிறது.

இந்தநிலையில் நேற்று இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகளை சென்னை மண்டல தலைமை என்ஜினீயர் எம்.ராஜமோகன் ஆய்வு செய்தார். மேலும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இக்கட்டிடத்தில் தினமும் ஏறத்தாழ 15 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. புறநோயாளிகளுக்கென புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் இன்னும் 2 மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதில் கீழ்தளம், தரைத்தளத்தோடு சேர்ந்து 8 தளங்கள் கட்டப்பட்டிருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டிடத்தின் கட்டுமான பணி வரும் ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் முடிவடையும். கட்டிடப்பணி முடிவடைந்தவுடன் இதனை தமிழக அரசிடம் ஒப்படைத்து விடுவோம். மேலும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முதல்-அமைச்சரால் திறக்கப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story