ஆதமங்கலம்புதூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 19 பேர் கூண்டோடு இடமாற்றம்


ஆதமங்கலம்புதூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 19 பேர் கூண்டோடு இடமாற்றம்
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 6:26 PM GMT)

ஆதமங்கலம் புதூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த தலைமை ஆசிரியர் உள்பட 19 பேரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை,

கலசபாக்கத்தை அடுத்த ஆதமங்கலம்புதூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருமால் என்பவர் தலைமை ஆசிரியராகவும், சுந்தரமூர்த்தி என்பவர் ஆங்கில ஆசிரியராகவும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சுந்தரமூர்த்தி சரியாக படிக்காத ஒரு மாணவரை கண்டித்துள்ளார். வீட்டிற்கு சென்ற மாணவன் தன்னை ஆசிரியர் சுந்தரமூர்த்தி தாக்கி விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவனின் தந்தை ஆசிரியரிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் திருமாலிடம் தன் மீது தாக்குதல் நடத்திய மாணவனின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாதுரை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை மீது ஏன் புகார் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் இதுபற்றி முதன்மை கல்வி அலுவலருக்கு அவர் புகார் அனுப்பினார். அதைத்தொடர்ந்து ஆதமங்கலம் புதூர் பள்ளியில் பணிபுரிந்து வந்த தலைமை ஆசிரியர் உள்பட 19 ஆசிரியர்களையும் செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு கூண்டோடு பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் ஆதமங்கலம் புதூர் பள்ளிக்கு நியமிக்கப்பட்டனர்.

Next Story