தொழில் முனைவோர் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தொழில் முனைவோர் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தொழில் முனைவோர் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
கடன் உதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் செய்ய ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்களிடம் இருந்து, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு வங்கிகளின் மூலம் மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதற்காக, வங்கிகளில் மானியத்துடன் கடன் பெறும் விதமாக, தமிழக அரசு சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.
இணையதளத்தில்...
இதில் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். இதனை பெற வயது மற்றும் கல்வித்தகுதிக்கான சான்று, விலைப்பட்டியல், திட்ட அறிக்கை நகல்களுடன் www.msmeonline.tn.gov.in/uye-gp என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் அதிகபட்ச திட்ட முதலீட்டுக்கான தொழில் கடன்கள் மானியத்துடன் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற ஆண், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் நாளில் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இதற்கான பதிவை www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
25 சதவீதம் மானியம்
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க 25 சதவீதம் அரசு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையான திட்டங்களுக்கு கடன் பெறலாம்.
இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு அருகே, தூத்துக்குடி என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டங்களின் கீழ் கடன் உதவி பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story