மாவட்ட செய்திகள்

மக்கள் நீதிமன்றத்தை நாடுபவர்களுக்கு தோல்வி கிடையாதுமாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு + "||" + Those who seek the People's Court have not failed District Chief Justice Speech

மக்கள் நீதிமன்றத்தை நாடுபவர்களுக்கு தோல்வி கிடையாதுமாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு

மக்கள் நீதிமன்றத்தை நாடுபவர்களுக்கு தோல்வி கிடையாதுமாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
‘மக்கள் நீதிமன்றத்தை நாடுபவர்களுக்கு தோல்வி கிடையாது’ என்று மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி கூறினார். மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ.11 கோடியே 44 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.
வேலூர், 

வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி தலைமை தாங்கினார். குடும்பநல நீதிபதி லதா தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான கனகராஜ் வரவேற்றார். மக்கள் நீதிமன்ற நிரந்தர தலைவரும் மாவட்ட நீதிபதியுமான முரளிதரன் வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி பேசியதாவது:-

மக்கள் நீதிமன்றத்தை நாடுபவர்களுக்கும், அவர்களது வழக்குகளுக்கும் தோல்வியே கிடையாது. இரு தரப்பினரும் சமாதானமாக செல்லும் இடமாக மக்கள் நீதிமன்றம் திகழ்கிறது. இங்கு உடனுக்குடன் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது. பல ஆண்டுகால பிரச்சினைக்குரிய வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற அனைத்து நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். மக்கள் நீதிமன்றத்தில் வரும் வழக்குகளை விசாரிக்க 7 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 36). கட்டிடமேஸ்திரி. இவர் 12.10.2018 அன்று பாகாயம் சந்திப்பில்நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சுபாஷ் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது தாயார் வளர்மதி ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்டு வேலூர் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரது வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விபத்தில் இறந்த சுபாஷின் தாயாருக்கு ரூ.8 லட்சத்தை காப்பீடு நிறுவனம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

இதேபோல காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த பெயிண்டரான வேல்முருகன் (32) என்பவர் விபத்தில் சிக்கி தனது வலது காலை இழந்தார். அவர் ரூ.32 லட்சம் இழப்பீடு கேட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் இழப்பீடாக காப்பீடு நிறுவனம் வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, வளர்மதி மற்றும் வேல்முருகன் ஆகியோருக்கு இழப்பீட்டுக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி வழங்கினார். இதில் மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

வேலூர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 10,636 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 1,969 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.