ஓசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்


ஓசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 July 2019 4:45 AM IST (Updated: 14 July 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வர்த்தகத்தை எளிதாக்குவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. தொழில் துறை முதன்மை செயலாளர் என்.முருகானந்தம், சிப்காட் மேலாண்மை இயக்குனர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:- சென்னைக்கு அடுத்ததாக, கோவை, ஓசூர் ஆகிய 2 பகுதிகள் தொழில் நிறைந்த பகுதிகளாகும். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு ஏதுவாக நாட்டிலேயே மிக அதிகமாக மற்றும் திறன் வாய்ந்த மனித வளத்தை கொண்ட மாநிலமாகவும், தொழில் வளர்ச்சிக்கும் தொழி்ல் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

நடப்பாண்டில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, ரூ. 3 லட்சத்து 431 கோடி அளவிலான முதலீட்டு திட்டங்கள் வாயிலாக சுமார் 10,50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழக அரசு, மத்திய பாதுகாப்பு துறையுடன் இணைந்து சென்னை, திருச்சி, சேலம், கோவை மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளை இணைத்து, பாதுகாப்பு தொழில் பெருவழி தடம் திட்டத்தின் வாயிலாக ரூ. 3,123 கோடி அளவிலான முதலீட்டு திட்டங்கள் ஈர்க்கவும், 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், “தமிழ்நாடு வர்த்தக எளிதாக்கல் சட்டம் 2018” இணையம் அடிப்படையிலான, ஒற்றை சாளர முறை ஆகிய 2 முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு, தொழில்துறையில் ஒரு மைல் கல்லாகும்.

மேலும், சிங்கிள் வின்டோ போர்டல் மூலம் இதுவரை 464 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், 41 பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தொழில் சார்ந்த பிரச்சினைகளை தீர்வு காண ஏதுவாக இனோவேஷன் சென்டர், ஓசூர் தொழில் பூங்காவில் அமைக்கப்படும். இது மட்டுமின்றி, ஓசூர் தொழில் பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகள், உலக தரத்தில் மேம்படுத்தப்படும். 100 ஏக்கர் நிலம் வைத்துள்ள தொழில் அதிபர்கள், தொழில் பூங்கா அமைக்க விரும்பினால், சிப்காட் அமைக்க தமிழக அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும், தனியார் தொழில் அதிபர்களுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தொழில் துறை துணை செயலாளர் பாலசுப்பிரமணி, தொழில் மைய கூடுதல் இயக்குனர் ஏகாம்பரம், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.பி. அசோக்குமார், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, சிப்காட் வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட தொழில்மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story