பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 7:19 PM GMT)

பா.ஜ.க.வை கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கர்நாடகத்தில் முதல்- மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தின் மூலமாக இழுக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் செயல்பாடுகளை கண்டித்து கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், நகர தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கரூர் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்க கூடாது. மத்தியிலும்-மாநிலத்திலும் பா.ஜ.க. மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்கிற நோக்கில் சர்வாதிகார ஆட்சியை பா.ஜ.க. நடத்தி வரு கிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. கர்நாடகாவில் ஜனதாதளம், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்க முடியாது. நேரில் கடிதம் கொடுத்து விளக்க வேண்டும் என்று சபாநாயகர் தெளிவாக கூறிவிட்டார். இந்நிலையில் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்கவே அனுமதி தரப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது ஆகும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, கர்நாடகாவில் பா.ஜ.க.வின் செயல்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதில் வர்த்தக பிரிவு தலைவர் சதீஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story