அரூரில் துணிகரம்: முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 42½ பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை
அரூரில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 42½ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவருடைய மனைவி ரேணுகாம்மாள். இவர்களுக்கு அறிவுசெல்வன், வெற்றி செல்வன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் அறிவு செல்வன் கிருஷ்ணகிரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். வெற்றி செல்வன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து அவர்கள் நேற்று அதிகாலை மீண்டும் வீடு திரும்பினர்.
அப்போது ஆறுமுகம் தனது வீட்டிற்குள் சென்று பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 42½ பவுன் நகைகளையும், ரூ.45 ஆயிரத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், இது தொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல கடந்த ஆண்டும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் வீட்டில் 12 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. அதே மர்ம ஆசாமிகள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 42 பவுன் நகைகள், ரூ.45 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் அரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story