கரூர்-குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 310 வழக்குகளுக்கு தீர்வு


கரூர்-குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 310 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 14 July 2019 4:15 AM IST (Updated: 14 July 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 310 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

கரூர்,

தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணும் பொருட்டு, கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதனை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். மொத்தம் 3 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், சிவில் மற்றும் காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், உரிமையியல் வழக்குகள், தொழிலாளர் நலன் வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டன.

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் கணேசன், சமூக ஆர்வலர் காமாட்சி, மருத்துவர் ராமன் ஆகியோர் இந்த அமர்வுகளில் பங்கேற்று வழக்குகளை விசாரித்து சமரச தீர்வுக்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். இதில் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகன்ராம் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

2,373 வழக்குகள்

இதேபோல், குளித்தலை நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி ஸ்ரீதர், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி பாக்கியராஜ், வழக்கறிஞர்கள் நடராஜன், முகமது ஜாபர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2,373 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 310 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, உரியவர்களுக்கு ரூ.30 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 633 நிவாரணமாக வழங்கப்பட்டது.

Next Story