திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளம் தூர்வாரும் பணி


திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளம் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 14 July 2019 4:15 AM IST (Updated: 14 July 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில் பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெறும் குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் மேலாண்மை இயக்கம் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடன் மழைநீர் சேகரிப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், பழைய மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை பழுதுபார்த்தல், பாரம்பரிய நீர்நிலைகளை பராமரித்தல், பயன் படுத்திய நீரை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.

அதேபோல் தேவையான பகுதிகளில் புதிய குளங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நீர் மேலாண்மை பணிகளை 7 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இதனால் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடி ஊராட்சி அணைப்பட்டியில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளம் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் விஜயலட்சுமி, மத்திய அரசின் அணுசக்தி துறை இணை செயலாளர் மெர்வின் அலெக்சாண்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் குளத்தை தூர்வாரும் பணியை பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினர்.

இதையடுத்து நீர் மேலாண்மை, நீர்தேவையின் முக்கியத்துவம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கருப்பையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story