சூளகிரி அருகே மாயமான விவசாயி பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை


சூளகிரி அருகே மாயமான விவசாயி பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 14 July 2019 4:00 AM IST (Updated: 14 July 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே மாயமான விவசாயி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டியை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 50). விவசாயி. மேலும் அந்த பகுதியில் உள்ள எல்லம்மன் கோவிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ராஜப்பா ரேஷன் கடைக்கு சென்று வருவதாக கூறி, மோட்டார்சைக்கிளில் சென்றார்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாததால் அவரது மனைவி குணம்மா சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜப்பாவை தேடி வந்தார்.

இந்த நிலையில் காமன்தொட்டியில் தட்சிண திருப்பதி கோவிலின் பின்புறம் தென்பெண்ணை ஆற்றின் அருகில் அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் பிணமாக கிடந்தது ராஜப்பா என தெரிய வந்தது. மேலும் அவர் தலைப்பகுதியில் காயம் இருந்தது. மோட்டார்சைக்கிளும் அருகிலேயே கிடந்தது. இதனால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து உடலை வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story