போக்சோ சட்டம் குறித்து டாக்டர்கள் முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும் கருத்தரங்கில் மருத்துவக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்


போக்சோ சட்டம் குறித்து டாக்டர்கள் முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும் கருத்தரங்கில் மருத்துவக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 7:37 PM GMT)

போக்சோ சட்டம் குறித்து டாக்டர்கள் முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கருத்தரங்கில் மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின்ஜோ அறிவுறுத்தினார்.

தர்மபுரி, 

குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து டாக்டர்கள், போலீசார் மற்றும் வக்கீல்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை கல்லூரி டீன் சீனிவாச ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். டாக்டர் மதன்ராஜ் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் முருகன், மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி இளங்கோ, துறைத்தலைவர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம், போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உடல் அளவில் ஏற்படுத்தும் பாதிப்பை விட உளவியில் ரீதியாக மனதளவில் ஏற்படுத்தும் பாதிப்பு சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காகவும், குற்ற செயல்களில் ஈடுபட்டோரை சட்டப்படி தண்டிக்கவும் அமல்படுத்தப்பட்டுள்ள போக்சோ சட்டம் குறித்து மருத்துவக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும். எனவே டாக்டர்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான மருத்துவ சிகிச்சை மற்றும் அறிக்கைகளை அளிக்கும்போது சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி கிடைத்துள்ள தடயங்களை மிகவும் கவனமாக முறையான மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி அதன்அடிப்படையில் மருத்துவ அறிக்கைகளை அளிக்க வேண்டும்.

சிறு தடயங்கள் கூட வழக்கு விசாரணையில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம் என்பதை மருத்துவ அறிக்கை கேட்கும் போலீசாரும் உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வில் உளவியல் துறையையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம் பேசுகையில், போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க டாக்டர்கள், போலீசார், வக்கீல்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமிகள் மருத்துவ சிகிச்சைக்கு வரும்போது போக்சோ சட்டவிதிகளின்படி பரிசோதனை மற்றும் அதுதொடர்பான அறிக்கையை விரைவாக டாக்டர்கள் அளிக்க வேண்டும். குற்ற பத்திரிகையை தாக்கல் செய்வதில் காலதாமதம் கூடாது என்று பேசினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேசுகையில், மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் 7 வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த ஆண்டு இதுவரை 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. போக்சோ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு உரிய தெளிவை இந்த கருத்தரங்கின் மூலம் போலீசார் பெற்று கொள்ள வேண்டும் என்றார். இந்த கருத்தரங்கில் போக்சோ சட்டத்தை பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து டாக்டர்கள், போலீசார் மற்றும் வக்கீல்களுக்கு சட்டம் சார்ந்த மருத்துவத்துறை உதவி பேராசிரியர் மதன்ராஜ் விரிவாக பயிற்சி அளித்தார். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த அரசு டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story