வைகை அணை நீர்மட்டம் 28 அடியாக சரிவு: வெப்பம் தாங்க முடியாமல் செத்து மிதக்கும் மீன்கள்


வைகை அணை நீர்மட்டம் 28 அடியாக சரிவு: வெப்பம் தாங்க முடியாமல் செத்து மிதக்கும் மீன்கள்
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 7:43 PM GMT)

வைகை அணை நீர்மட்டம் 28 அடியாக சரிந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் வெப்பம் தாங்க முடியாமல் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் வைகை அணை நீர்தேக்கப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கியது முதலே போதுமான மழை இல்லாத காரணத்தால் வைகை அணை நீர்வரத்து இல்லாமல் காணப்படுகிறது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 28 அடியாக சரிந்துள்ளது. அதிலும் 15 அடி வரையில் வண்டல் மண் படிந்துள்ளதால் அணையில் தற்போது மிகவும் குறைந்த அளவு தண்ணீரே தேங்கியுள்ளது. நீர்மட்டம் குறைந்த காரணத்தால் நீர்தேங்கும் பரப்பளவும் சுருங்கிவிட்டது.

தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் வேகமாக சூடாகி விடுகிறது. இதன்காரணமாக தண்ணீரின் வெப்பத்தை தாங்க முடியாத மீன்கள் வைகை அணை நீர்தேக்கம் முழுவதும் செத்து மிதக்கிறது. கரையோரங்களில் ஏராளமான மீன்கள் செத்து கிடக்கிறது. பெரும்பாலும் நன்கு வளர்ச்சி அடைந்த 2 கிலோவிற்கும் மேலான எடையுள்ள மீன்களே அதிகமாக செத்து கிடக்கிறது. குறிப்பாக கட்லா, மிருகால் வகையை சேர்ந்த மீன்களே அதிகளவில் இறந்து கிடக்கிறது.

இவ்வாறு அதிகளவு மீன்கள் நீர்தேக்கத்தில் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வைகை அணையில் இருந்து குடிநீர் செல்லும் மதுரை, தேனி, ஆண்டிப்பட்டி, சேடபட்டி, பெரியகுளம் பகுதிகளில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

இதற்கிடையே நீர்தேங்கும் பரப்பளவு மிகவும் குறைந்துள்ளதால், மீனவர்களின் வலையில் அதிகமான மீன்கள் சிக்குகின்றன. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர்வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே மீன்கள் இறப்பை தடுக்க முடியும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். பலமாதங்கள் வளர்க்கப்பட்ட மீன்கள் வெப்பத்தில் இறப்பதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story