பயன்பாடு இல்லாத ஆழ்குழாய் கிணறுகளிலும் மழைநீரை சேகரிக்க வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


பயன்பாடு இல்லாத ஆழ்குழாய் கிணறுகளிலும் மழைநீரை சேகரிக்க வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 7:58 PM GMT)

பயன்பாடு இல்லாத ஆழ்குழாய்கிணறுகளிலும் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போடிபட்டி,

பூமிப்பெண்ணின் உடலில் துளைகளிட்டு ரத்தத்தை உறிஞ்சுவது போன்ற செயல் தான் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீரை உறிஞ்சுவது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். ஆனாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக அதற்கான தேடலில் பூமிக்குள் ஆயிரக்கணக்கான அடிகள் துளையிட்டு தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க உள்ளாட்சி நிர்வாகங்கள் தேர்ந்தெடுத்த எளிய வழி தான் வீதிகள் தோறும் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதில் கைப்பம்புகள் அமைப்பது ஆகும்.

ஆனால் இன்றைய நிலையில் பெரும்பாலான கைப்பம்புகள் தண்ணீர் இன்றியோ, பராமரிப்பு இன்றியோ வீணாக கிடக்கிறது. இவ்வாறு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மழைநீர் சேமிப்புக்கு கை கொடுக்கும் எளிய வழித்தடங்களாக உள்ளன. அந்த வகையிலான மாதிரித்திட்டம் குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்துக்கிணத்துப்பட்டி உள்பட ஒரு சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

இயற்கை கொடுக்கும் மழைநீரை சேமிக்கத்தவறியதன் பலனே இன்று தண்ணீர்த்தட்டுப்பாடாய் விசுவரூபம் எடுத்து நிற்கிறது.இதற்கு தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாலேயே இன்று மழைநீர் சேமிப்பு குறித்து பேசத்தொடங்கியுள்ளோம். இதனை வெறும் பேச்சுடன் நிறுத்திவிடாமல் முழு மூச்சாய் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

பூமிக்குள் குழாய்கள் அமைத்து உறிஞ்சிய நீரை மீண்டும் அதே குழாய்கள் மூலம் பூமிக்குள் கொண்டு செல்ல ஆழ்குழாய் கிணறுகளில் மழைநீர் சேமிப்பு திட்டம் உதவுகிறது. இந்த திட்டத்தின்படி பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளைச் சுற்றி கான்கிரீட் தொட்டி போன்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆழ்குழாய் கிணற்றின் மேல்புறமுள்ள குழாயில் தண்ணீர் செல்லும் வண்ணம் சிறு சிறு துளைகள் அமைக்கப்படுகிறது. பின்னர் இந்த குழாயை சுற்றிலும் கல் மற்றும் மண்ணால் மூடப்படுகிறது.

இந்த அமைப்பின் மூலம் அந்த பகுதியிலுள்ள மழைநீர் வடிகட்டப்பட்டு குழாய்களின் மூலம் பூமியின் அடி ஆழத்தை சென்று சேர்கிறது. இந்த திட்டத்தில் பூமிக்கடியிலுள்ள நீரோட்டப்பகுதிக்கு மழைநீர் நேரடியாக சென்று சேர்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் விரைவில் உயரும் வாய்ப்பு உள்ளது. உடுமலை,குடிமங்கலம் பகுதிகளில் பல இடங்களில் கைவிடப்பட்ட கைப்பம்புகள் உள்ளன. அவற்றை முழுமையாக மழைநீர் சேமிப்புக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தைப்போல தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story