பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் பேட்டி


பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 14 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரி, குளங்களை தூர்வாரி, மழைநீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நல்லூர்,

திருப்பூர் மாவட்ட பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் திருப்பூர் மணியக்காரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இளைஞர்கள் அதிக அளவில் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலும், உறுப்பினர் சேர்க்கைக்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, இளைஞர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி சற்று சோர்வை கொடுத்திருந்தாலும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டவுடன் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 2 லட்சம் உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். சென்னைக்கு ரெயில் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை வைத்தே, அங்குள்ள குடிநீர் பற்றாக்குறை எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதனால், மாநில அரசு நீர்நிலைகளை தூர்வார பொதுமக்கள் மற்றும் அமைப்புகளின் உதவியை கேட்டு உள்ளது.

ஆனால் நீர் வரும் பாதைகளில் எல்லாம் 10 முதல் 30 சதவீதம் வரை ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆகவே நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து, ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற சட்டத்தை வலுப் படுத்தி, மிக குறுகிய காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே வேளையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்கிற பெயரில் ஒரே இடத்தில் 20 முதல் 30 ஆண்டுகள் வரை உள்ள குடியிருப்புகளை ஒரே நாளில் காலி செய்ய வைப்பது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு நியாயமான முறையில் அரசு மாற்று இடம் வழங்க வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஏரி, குளங்களை தூர்வாரி, மழைநீரை சேமிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் தபால் எழுத்தர் தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டால், தமிழகத்திலும் பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த வி‌‌ஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story