பிரதம மந்திரி கிஷான் மாந்தன் ஓய்வூதிய திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு


பிரதம மந்திரி கிஷான் மாந்தன் ஓய்வூதிய திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 July 2019 4:15 AM IST (Updated: 14 July 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி கிஷான் மாந்தன் திட்டத்தில் ஓய்வூதியம் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய அரசின் வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை, இந்திய காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து பிரதம மந்திரி கிஷான் மாந்தன் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்த திட்டத்தின் நிதி மேலாண்மை மற்றும் ஓய்வூதியம் வழங்கும் பொறுப்புகள் இந்திய காப்பீட்டு நிறுவனத்திடம் உள்ளது. இது பயனாளிகள் விருப்பம் மற்றும் பங்களிப்புடன் கூடிய திட்டமாகும். ஓய்வூதிய திட்டத்தில் இணையும் விவசாயிகள் தங்கள் 60 வயதுக்கு பின்னர் மாதம் தோறும் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் பெறுவார்கள்.

18 வயது முதல் 40 வயது வரையான விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையலாம். 2 ஹெக்டேர் அளவுக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு, குறு விவசாயிகள் திட்டத்தில் சேர தகுதியானவர்களாவர். மாநில அளவில் பிரதம மந்திரியின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தை செயல்படுத்தும் துறை பிரதம மந்திரி கிஷான் மாந்தன் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும். விவசாயிகள் பொது இ-சேவை மையங்கள் மூலம் இந்த திட்டத்தில் சேரலாம். இதற்கு பதிவு கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும்.

திட்டத்தில் இணைந்த விவசாயிகள் தங்கள் வயதின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை (ரூ.55 முதல் ரூ.200 வரை) மாதம் தோறும் செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு சமமான தொகை மத்திய அரசு செலுத்தும். மாநில அரசுகள் விரும்பினால், விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பங்கினை செலுத்தலாம். சம்பந்தப்பட்ட விவசாயி விரும்பினால் கிஷான் சம்மான் திட்டத்தில் இருந்தும் இந்த தொகையை பிடித்தம் செய்யும் படி செய்யலாம். யாரேனும் திட்டத்தில் இணைந்து இடைப்பட்ட சில மாதங்கள் அவர்களுக்கான தொகை செலுத்தாமல் விடுபட்டால், மீண்டும் திட்டத்தில் சேர உரிய தொகையை வட்டியுடன் செலுத்தி திட்டத்தில் தொடரலாம். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சந்தா தொகை செலுத்திய விவசாயி விரும்பினால் திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ளலாம்.

அவருக்கு அதுவரை செலுத்திய தொகை வட்டியுடன் வழங்கப்படும். தகுதி இல்லாத விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் பங்களிப்பு தொகை நிறுத்தப்படும். சம்பந்தப்பட்ட விவசாயி விரும்பினால் அவர் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி திட்டத்தில் தொடர அனுமதி உண்டு. 60 வயதுக்கு பின்னர் அவர் கணக்கு முடித்து வட்டியுடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

சந்தாவை முறையாக செலுத்தி வரும் விவசாயி 60 வயது அடையும் முன்பு இறந்து விட்டால் விவசாயியின் மனைவி (பெண் விவசாயியாக இருந்தால் கணவர்) கணக்கை தொடரலாம். அல்லது திட்ட பயன்களை பெற்று திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ளலாம்.

60 வயது பூர்த்தியாகி ஓய்வூதியம் பெறும் விவசாயி இறந்து விட்டால் அவரது மனைவி அல்லது கணவருக்கு 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு குடும்ப ஓய்வூதியமானது ஏற்கனவே திட்டத்தில் இணைந்திருக்கும் கணவர் அல்லது மனைவிக்கு கிடையாது. சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் மனைவி அல்லது கணவர் இருவரும் இறந்துவிட்டால் அவர்களுக்கான தொகுப்பு தொகை திட்ட நிதியில் சேர்க்கப்படும்.

பிரதம மந்திரியின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் சேர முடியாதவர்கள் என்று அறிவிக்கப்பட்ட பிரிவினர் இந்த திட்டத்திலும் சேரமுடியாது.

கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் இணைந்து பயன் அடைந்து வரும் விவசாயிகள் பொது இ-சேவை மையங்கள் மூலம் நேரடியாக பதிவு செய்து ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டம் ஈரோடு மாவட்டத்தில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Next Story