அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் கைதான ரவுடி உள்பட 7 பேர் சிறையில் அடைப்பு
அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் கைதான ரவுடி உள்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோட்டக்குப்பம்,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத் என்கிற வினோத்ராஜ் (வயது 28). அ.தி.மு.க. பிரமுகர். இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த அபிஷ், முகேஷ். இதில் அபிஷுக்கும், கூனிமேடு கிராமத்தை சேர்ந்த சரண் (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு பேனர் வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது.
கடந்த 11-ந் தேதி காலாப்பட்டில் உள்ள மதுக்கடையில் சரண் தனது கூட்டாளியான கீழ்புத்துப்பட்டு சாவடியை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா மற்றும் நண்பர்களுடன் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அபிஷுடம் ஜனா தரப்பினர் தகராறு செய்தனர்.
இதை அறிந்த வினோத்ராஜ், தனது நண்பர் முகேஷுடன் சென்று ஜனாவை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஜனா மற்றும் அவரது கூட்டாளிகள் வினோத்ராஜை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாத்தூர் முந்திரிதோப்பு பகுதியில் பதுங்கியிருந்த ஜனா (29), அவரது கூட்டாளிகள் சின்னகாலாப்பட்டு கவுதம் (29), கீழ்புத்துப்பட்டு பரத் (24), மனோராஜ் (22), கூனிமேடு சரண், கதிரவன் (27), சுனாமி குடியிருப்பு கலைஞர் (45) ஆகிய 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் அனைவரும் திண்டிவனம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story