எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும் தினேஷ் குண்டுராவ் பேட்டி
எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்றும் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்றும் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சமாதானப்படுத்த முயற்சி
ராஜினாமா செய்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பி வருவார்கள். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை, மந்திரி எம்.டி.பி. நாகராஜ் சந்தித்து பேசியுள்ளார். அதுபோல, சுதாகர் எம்.எல்.ஏ.வும் சித்தராமையாவை சந்தித்து பேசுவார். எம்.டி.பி.நாகராஜும், சுதாகரும் தங்களது ராஜினாமாவை வாபஸ் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ராமலிங்கரெட்டியை பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து பேச முயற்சித்துள்ளனர். ஆனால் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசுவதை ராமலிங்கரெட்டி நிராகரித்துள்ளார். விரைவில் அவர், ராஜினாமாவை திரும்ப பெறுவார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். இந்த முடிவு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் ஆலோசித்து எடுத்ததாகும். நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும். அதில் முழு நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா வெற்றி பெற எந்த வாய்ப்பும் இல்லை. அதனால் தான் முதல்-மந்திரி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி அறிவித்ததும் பா.ஜனதாவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேதி குறித்து வருகிற 15-ந் தேதி(அதாவது நாளை) சட்டசபையில் நடைபெறும் விவாதத்தில் தெரியவரும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் இழுக்க முயற்சிப்பதால், அவர்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றபடி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா எம்.எல்.ஏ.க்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை ஓட்டலில் தங்க வைத்துள்ளோம்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
Related Tags :
Next Story