எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை வாபஸ் பெற மாட்டார்கள் குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது எடியூரப்பா பேட்டி
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை வாபஸ் பெற மாட்டார்கள் என்றும், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாகவும் எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை வாபஸ் பெற மாட்டார்கள் என்றும், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாகவும் எடியூரப்பா கூறினார்.
கர்நாடகத்தில் எழுந்துள்ள அரசியல் சிக்கல் குறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வரவேற்கிறேன்
சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், ஆனந்த்சிங், முனிரத்னா, ரோஷன்பெய்க் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி உள்ளதால், அதை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆகமொத்தம் 15 எம்.எல்.ஏ.க்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். வருகிற 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, இதை முதல் வழக்காக எடுத்து விசாரிக்க உள்ளது.
நாங்கள் அதுவரை காத்திருப்போம். குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. அதனால் அவரே நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதாக கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன். ஆனால் இந்த அரசு வாக்கெடுப்பில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. இந்த அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
வாபஸ் பெற மாட்டார்கள்
இந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சைகள் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றுவிட்டனர். இந்த நிலையில், இக்கூட்டணி அரசு எப்படி பெரும்பான்மை பலத்தை பெற முடியும். கூட்டணி கட்சியினர் எந்த முயற்சி எடுத்தாலும், ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற மாட்டார்கள். அதனால் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்வது வீண்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
பெரும்பான்மை இல்லை
கர்நாடக அரசியல் சிக்கல் குறித்து பா.ஜனதாவை சேர்ந்த சோமண்ணா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கூட்டணி அரசு வழி தவறிவிட்டது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்துள்ள மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 16-ந் தேதி தீர்ப்பு வரவுள்ளது. இந்த தீர்ப்பு அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு தீர்ப்பு வந்தால், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மோதிக்கொள்வார்கள். குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. சபாநாயகர் ரமேஷ்குமார் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் அவர், ராஜினாமா கடிதங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் என்பது எனக்கு தெரியும். அவருக்கு கடிவாளம் போடுகிறார்கள்.
Related Tags :
Next Story