திருக்கனூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்


திருக்கனூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 13 July 2019 10:30 PM GMT (Updated: 13 July 2019 9:18 PM GMT)

திருக்கனூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருக்கனூர்,

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குடிநீர்த்தேக்க தொட்டியில் மின் மோட்டார் பழுதானது. இதனால் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி அப்பகுதி மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் முறையிட்டும், மின்மோட்டார் பழுது சரிசெய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை காட்டேரிக்குப்பம் மெயின்ரோட்டில் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். ஆனால் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று கூறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் காட்டேரிக்குப்பத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து விரைவில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

இதை ஏற்று கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 7.15 முதல் 9.15 மணி வரை நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story