புதுச்சேரி மாநிலத்தில் ரூ.8,425 கோடியில் பட்ஜெட்; திட்டக்குழு கூட்டத்தில் முடிவு


புதுச்சேரி மாநிலத்தில் ரூ.8,425 கோடியில் பட்ஜெட்; திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 13 July 2019 11:45 PM GMT (Updated: 13 July 2019 9:18 PM GMT)

புதுவை மாநிலத்தின் பட்ஜெட் ரூ.8,425 கோடியாக இருக்கும் என்று திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை மாநில பட்ஜெட் தொகை குறித்து ஆண்டு தோறும் திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்வது வழக்கம்.

அதன்படி 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டக்குழு கூட்டம் கடந்த 6-ந்தேதி நடந்தது.

இந்த கூட்டத்துக்கு சட்டமன்ற கட்சி தலைவர்களையும் அழைக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கு ஒப்புதல் கிடைக்காததால் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் சட்டமன்ற கட்சி தலைவர்களும், பிராந்தியத்துக்கு ஒரு எம்.எல்.ஏ.வும், நியமன எம்.எல்.ஏ. ஒருவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்து தலைமை செயலக கருத்தரங்க அறையில் நேற்று மீண்டும் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாநில திட்டக்குழுவின் தலைவரான கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் கோகுலகிருஷ்ணன் எம்.பி., அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., மாகி பிராந்திய எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் இந்த கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டார்.

கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம். எல்.ஏ. பேசும்போது, மத்தியில் திட்டக்குழு கலைக்கப்பட்ட நிலையில் புதுவையில் திட்டக்குழு கூட்டம் நடத்துவது தேவையற்றது என்றார். புதுவையில் நிலவும் நிதி நெருக்கடியை தவிர்க்கும் விதமாக வருமானத்தை பெருக்க மதுபான மொத்த விற்பனைக்கு அரசு கார்ப்பரேசன் தொடங்கவேண்டும், என்றும் மதுபான கடைகளை ஏலத்தில் விடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசும்போது, ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்சு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கேபிள் டி.வி. வரியை ஆபரேட்டர்களிடமிருந்து வசூலிக்கவேண்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இறுதியாக 2019-20ம் ஆண்டின் பட்ஜெட் ரூ.8 ஆயிரத்து 425 கோடியாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் புதுவை மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.5 ஆயிரத்து 415 கோடியாகவும, மத்திய அரசின் உதவி ரூ.1,540 கோடியாகவும், மத்திய அரசு திட்டங்களுக்கா நிதியுதவி ரூ.325 கோடி, வெளிக்கடன் ரூ.900 கோடியாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்த பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரத்து 980 கோடி சம்பளம், பென்ஷன், முதியோர் பென்ஷன், சார்பு நிறுவனங்கள், நகராட்சிகளுக்கான மானியம், மின்சாரம் உள்ளிட்டவற்றுக்க்கான செலவு ரூ.7 ஆயிரத்து 980 கோடியாக இருக்கும். இலவச அரிசிக்கு ரூ.160 கோடி, ஊக்கத்தொகைக்கு ரூ.41 கோடி, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.33 கோடி, மானியத்துக்கு ரூ.39 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.30 கோடி, பொதுப்பணித்துறைக்கு ரூ.377 கோடி, இதர வகையில் ரூ.32 கோடி செலவாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பட்ஜெட்டில் ரூ.267 கோடி துண்டுவிழும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள தொகை குறித்த விவரம் மத்திய உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ஒப்புதல் அளித்தபின் புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

Next Story