தகுதி நீக்கம் செய்தாலும் கவலை இல்லை கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பு முடிவில் உறுதியாக இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி


தகுதி நீக்கம் செய்தாலும் கவலை இல்லை கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பு முடிவில் உறுதியாக இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி
x
தினத்தந்தி 14 July 2019 3:30 AM IST (Updated: 14 July 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு முடிவில் உறுதியாக இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி, தன்னை தகுதி நீக்கம் செய்தால் கவலை இல்லை என்றும், தனக்கு பதிலாக குடும்பத்தினரை தேர்தலில் களமிறக்கவும் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

பெங்களூரு, 

கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு முடிவில் உறுதியாக இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி, தன்னை தகுதி நீக்கம் செய்தால் கவலை இல்லை என்றும், தனக்கு பதிலாக குடும்பத்தினரை தேர்தலில் களமிறக்கவும் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்ய...

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., மந்திரியாக இருந்தார். அவர் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தி அடைந்த ரமேஷ் ஜார்கிகோளி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு சென்று, அங்குள்ள ஓட்டலில் தங்கினார். அப்போது அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ரமேஷ் ஜார்கிகோளி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது மும்பையில் தங்கி உள்ளார். அவரது நெருங்கிய ஆதரவு எம்.எல்.ஏ.வான மகேஷ் குமடள்ளியும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உள்ளார். இதற்கிடையில், ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் சித்தராமையா மனு கொடுத்துள்ளார்.

கூட்டணி ஆட்சி நீடிக்க கூடாது

இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் சபாநாயகர் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால், அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டிலும் சபாநாயகர் சார்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மும்பையில் தன்னுடன் ஓட்டலில் தங்கியிருக்கும் சக எம்.எல்.ஏ.க்களுடன் ரமேஷ் ஜார்கிகோளி ஆலோசித்ததாக தெரிகிறது.

அப்போது தன்னையும், மகேஷ் குமடள்ளியையும் தகுதி நீக்கம் செய்தால், அதனை கண்டு பயப்படவும் மாட்டேன். அதுபற்றி கவலைப்பட போவதில்லை. ஆனால் கூட்டணி ஆட்சி மட்டும் கர்நாடகத்தில் நீடிக்க கூடாது என்று சக எம்.எல்.ஏ.க்களுடன் ரமேஷ் ஜார்கிகோளி கூறியதாக தெரிகிறது. இதன் மூலம் அவர் கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

தன்னை தகுதி நீக்கம் செய்தால், கோகாக் தொகுதியில் தனது குடும்பத்தில் ஒருவரை தேர்தலில் போட்டியிட வைத்து, அவரை வெற்றி பெற வைப்பது, அவருக்கு மந்திரி பதவியை வாங்கி கொடுக்கும் முடிவுக்கு ரமேஷ் ஜார்கிகோளி வந்துள்ளார். தான் எடுத்திருக்கும் இந்த முடிவை ஆதரவாளர் மகேஷ் குமடள்ளியிடம் கூறி, அவரையும் சம்மதிக்க வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story