ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, 23-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வருகிற 23-ந்தேதி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும் என்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடலூர்,
காவிரி படுகையை பாதுகாக்கும் நோக்குடன் செயல்படும் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டது.
அதன்படி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் வருகிற 15-ந்தேதி முதல் ஒருவார காலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது எனவும், 23-ந்தேதி கடலூர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கும் பேரணி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதோடு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக டெல்டா மாவட்டங்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ள தளவாட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தி்ல் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, தி.மு.க. நகர செயலாளர் ராஜா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஏ.கே.சேகர், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில மாணவர் அணி தலைவர் அருள்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், அக்ரி அ.சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story