மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு


மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு
x
தினத்தந்தி 15 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினர்.

சேலம்,

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முற்றிலும் வறண்டுபோனதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்து பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், மழை பெய்ய வேண்டியும், குடிநீர் தட்டுப்பாடு தீரவும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னம்பிள்ளையூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

நூதன வழிபாடு

இதனையடுத்து நேற்று அப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி ஒப்பாரி வைத்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். அதாவது, வறட்சி அரக்கன் என்ற கொடும்பாவியை கட்டி அதனை பாடையில் வைத்து இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கு போல் செய்து பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுததை காணமுடிந்தது.

மேலும், அங்கிருந்த சில ஆண்கள், மொட்டையும் அடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த கொடும்பாவியை அங்குள்ள சுடுகாடு வரை சிலர் தூக்கி சென்று அதற்கு தீ வைத்து எரித்தனர். இந்த நூதன வழிபாட்டில் தென்னம்பிள்ளையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அந்த கிராம பெண்கள் கூறுகையில், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மழை பெய்ய வேண்டி நூதன முறையில் வழிபாடு நடத்தி உள்ளோம். அதாவது வறட்சி அரக்கனை பாடையில் வைத்து இறந்தவர்களுக்கு சடங்கு செய்வது போன்று இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். எங்களது நூதன வழிபாட்டால் பரவலாக மழை பெய்து செழிப்பு ஏற்படும் என்று நம்பிக்கை உள்ளது, என்றனர்.

Next Story