கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற - 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இந்தநிலையில் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ஒரு காரில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கம்பம் வருவாய் ஆய்வாளர் பரமசிவம் தலைமையிலான வருவாய்த்துறையினர் கம்பம்-கூடலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் 12 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த கம்பத்தை சேர்ந்த ராஜா என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர், உத்தமபாளையம் உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் காரும் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story