கள்ளக்காதல் விவகாரத்தில், அ.ம.மு.க. பிரமுகரை கொலை செய்த 2 பேர் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் அ.ம.மு.க. பிரமுகரை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து என்ற காமராஜ் (வயது 60). அ.ம.மு.க பிரமுகர். இவர் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் குள்ளபுரம்-அணைக்கரைபட்டி செல்லும் சாலையின் அருகே உள்ள கரட்டுப் பகுதியில் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே கொலை நடந்த நாள் மாரிமுத்துவுடன், குள்ளப்புரம் கடைவீதியை சேர்ந்த சரவணபிரபு (34), மணிவேல் (35) ஆகியோர் சென்றதும், அதன்பிறகு அவர்கள் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் ஊருக்கு வந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் மாரிமுத்துவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட மணிவேலின் மனைவி தனலட்சுமியிடம் சரவணபிரபு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக மாரிமுத்து ஊரில் சொல்லிக் கொண்டு திரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிவேலிடம், தனலட்சுமி தெரிவித்துள்ளார். இதனால் மாரிமுத்து மீது மணிவேலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் சரவணபிரபுவும் வேண்டுமென்றே மாரிமுத்து அவதூறு பரப்புவதாகவும் மணிவேலிடம் தெரிவித்துள்ளார். இதனால் மணிவேலும், சரவணபிரபுவும் சேர்ந்து மாரிமுத்துவை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளனர்.
இதில் மாரிமுத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும், மாரிமுத்துவை மது அருந்துவதற்காக குள்ளபுரம்-அணைக்கரைபட்டி செல்லும் சாலையின் அருகே உள்ள கரட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர். மது போதை தலைக்கேறியதும், 2 பேரும் சேர்ந்து மாரிமுத்துவை தாக்கி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story