கடலூரில் மின்தடை புகார் பதிவு மையம் திறப்பு - 9 லட்சம் மின் நுகர்வோர் பயன்பெறுவார்கள்
கடலூர் மாவட்டத்தில் 9 லட்சம் மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் மின் தடை புகார் மையம் அமைக்கப்பட்டது. இதை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று திறந்து வைத்தார்.
கடலூர்,
தமிழக முதல்-அமைச்சர், தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மின்நுகர்வோர் மின்தடை தொடர்பான குறைகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் பதிவு மையம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதன்படி கடலூர் மாவட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோரின் மின் தடை குறித்த குறைகளை உடனுக்குடன் சரி செய்ய கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையம் அமைக்க ரூ.45 லட்சத்து 90 ஆயிரம் திட்ட ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செம்மண்டலம் துணை மின் நிலைய வளாகத்தில் மின் தடை புகார் பதிவு மையம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு மின் தடை புகார் பதிவு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மின் தடை புகார் மையத்தில் உள்ள கணினியை இயக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின் தடை குறித்த புகார்களை 1912 அல்லது 18004254116 என்ற இலவச தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களது மின் தடை குறித்த புகார்களை பதிவு செய்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 9 லட்சத்து 5 ஆயிரத்து 904 மின் நுகர்வோர்கள் பயன் அடைவார்கள் என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில் மின்துறை தலைமை பொறியாளர் சிவராஜன், மேற்பார்வை பொறியாளர் சத்யநாராயணன், செயற்பொறியாளர் (பொது) அய்யப்பன், செயற்பொறியாளர்கள் ராமலிங்கம், பழனிராஜூ, உதவி பொறியாளர் பாலாஜி, கடலூர் நகரசபை முன்னாள் தலைவர் குமரன், நகரசபை முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், அ.தி.மு.க. நகர துணை செயலாளர் கந்தன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, விவசாய அணி காசிநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், ஆர்.வி.மணி, எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள், மின்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story