விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் கண்மாயில் கறி விருந்து படைத்து வழிபாடு


விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் கண்மாயில் கறி விருந்து படைத்து வழிபாடு
x
தினத்தந்தி 15 July 2019 3:30 AM IST (Updated: 14 July 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே கே.வெங்கடேசுவரபுரம் கிராமத்தில் விவசாயம் செழிக்க கண்மாயில் கிடாவெட்டி, கறிவிருந்து படைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே கே.வெங்கடேசுவரபுரம் கிராமத்தில் விவசாயம் செழிக்க கண்மாயில் கிடாவெட்டி, கறிவிருந்து படைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிராம மக்கள் வழிபாடு

கோவில்பட்டி அருகிலுள்ள கிராமம் கே.வெங்கடேசுவரபுரம். இக்கிராம மக்கள் நேற்று மழைவேண்டி வழிபாடு நடத்துவதற்காக, மேளதாளம் முழங்க அங்குள்ள கண்மாய்க்கு பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

கண்மாயில் ஒரு இடத்தில் கிராம மக்கள் கிடா வெட்டி வடக்குத்தி அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கறிவிருந்து படையல் வைத்தும், பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். இதில் ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர். அனைவருக்கும் கிடா விருந்து பரிமாறப்பட்டது.

30 ஆண்டுகளுக்கு பிறகு...

இதுகுறித்து ஊர் மக்கள் கூறியதாவது:- எங்கள் ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழிபாடு முறை நடைமுறையில் இருந்தது. இந்த வழிபாடு எந்த சிலையையும் வைத்து நடப்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து கிடா கறியுடன் உணவு பிரசாதமாக படைக்கப்படும். இந்த வழிபாட்டின் மூலம் ஊரில் நல்ல மழை பொழிவும், நல்ல விவசாயமும் நடக்கும்.

கால்நடைகள் பெருகும், அத்துடன் ஊரில் உள்ள கண்மாய் பெருகி நிறைவான விவசாய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம் ஊர் செழிக்கும். தற்போது ஏற்பட்ட வறட்சி காரணமாக இந்த வழிபாடு நடத்த கிராம மக்கள் முடிவு செய்து தற்போது நடத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் எங்கள் பகுதியில் நல்லமழை பெய்யும். விவசாயம் செழிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story