தூத்துக்குடியில் பெண்ணிடம் 2½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி
தூத்துக்குடியில் பெண்ணிடம் 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகரில் தொடரும் நகை பறிப்பு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பெண்ணிடம் 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகரில் தொடரும் நகை பறிப்பு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
நகைபறிப்பு
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி கவிதா(வயது 33). இவர் நேற்று முன்தினம் ஹெலன் என்பவருடன், அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றார். மீண்டும் அங்கிருந்து வீட்டுக்கு இருவரும் நடந்து வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் பிரையண்ட்நகர் 2-வது தெரு கிழக்கு பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது ஹெல்மெட் அணிந்த ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் அவர்களின் அருகே திடீரென்று வந்தார். அந்த நபர் திடீரென கவிதா கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். அந்த 2 பேரும் திருடன்...திருடன் என கத்தியவாறு மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சிறிது தூரம் ஓடினர். ஆனால் மர்ம நபர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிக் கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் அச்சம்
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்து செல்கின்றனர். தூத்துக்குடி மாநகர பகுதியில் போலீசுக்கு சவால் விடும் அளவுக்கு தொடர்ந்து கொள்ளையர்களின் அட்டகாசம் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
Related Tags :
Next Story