கயத்தாறு அருகே களைவெட்டியால் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி சாவு வாலிபர் கைது
கயத்தாறு அருகே களைவெட்டியால் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி இறந்தார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே களைவெட்டியால் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி இறந்தார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி
கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் வேல்சாமி. இவரின் மூத்த மனைவிக்கு 2 மகள்களும், தங்கவெயில்முத்து (வயது 27) என்ற மகனும் உள்ளனர். மூத்த மனைவி இறந்த பின்னர் வேல்சாமி வள்ளியம்மாள் (வயது 60) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். வள்ளியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் 2 மகள்கள் மற்றும் தங்கவெயில்முத்துவை வள்ளியம்மாள் வளர்த்து வந்தார். 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. தங்கவெயில்முத்துக்கு திருமணம் ஆகவில்லை. விவசாயியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் தன் தேவைக்காக வள்ளியம்மாளிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார். வள்ளியம்மாளும் பணம் கொடுத்து வந்தார்.
களைவெட்டியால்...
இந்த நிலையில் சம்பவத்தன்று வள்ளியம்மாளிடம் தங்கவெயில்முத்து செலவிற்கு பணம் கேட்டார். அதற்கு தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று வள்ளியம்மாள் கூறினாராம்.
இதில் ஆத்திரம் அடைந்த தங்கவெயில்முத்து வீட்டில் இருந்த களைகள் அகற்ற பயன்படும் களை வெட்டியை கொண்டு, வள்ளியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது.
ரத்தவெள்ளத்தில் வள்ளியம்மாள் கீழே விழுந்தவுடன், அவர் தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.
வாலிபர் கைது
இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் கொலை வழக்குப்பதிவு செய்து தங்கவெயில்முத்துவை கைது செய்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story